×

இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா முழுமையாக துணை நிற்கிறது; என்னென்ன உதவிகள் தேவையோ அனைத்தும் செய்து தரப்படும்: அதிபர் ஜோ பைடன் பேட்டி

டெல்அவிவ்: இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா முழுமையாக துணை நிற்கிறது என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் – ஹமாஸ் இடையே 12-வது நாளாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில், இஸ்ரேல் தரப்பில் 1,400க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில், காசா பகுதியில், 2,778க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். காசா நகரில் மருத்துவமனை மீது நடந்த தாக்குதலில் 500க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

இதனிடையே இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஜோ பைடன், ஜோர்டானில் அந்நாட்டு மன்னர் அப்துல்லா, எகிப்து அதிபர் அப்துல் எல் சிசி, பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் ஆகியோரை சந்திக்க திட்டமிட்டிருந்தார். ஆனால், காசா மருத்துவமனை மீது நடந்த குண்டுவீச்சில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததால், அரபு நாடுகளின் தலைவர்களுடனான ஜோ பைடனின் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், டெல்அலிவ் நகரில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இருவரும் கூட்டாக பேட்டியளித்தனர்.

அப்போது பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா முழுமையாக துணை நிற்கிறது. இஸ்ரேலுக்கு என்னென்ன உதவிகள் தேவையோ அனைத்தையும் அமெரிக்கா செய்து தரும். ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் பாதையை ஹமாஸ் அமைப்பினர் பின்பற்றி வருகின்றனர். ஹமாஸ் தாக்குதலில் ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்களும், 31 அமெரிக்கர்களும் கொல்லப்பட்டுள்ளனர். ஹமாஸ் பிணைக் கைதிகளாக பொதுமக்களையும். குழந்தைகளையும் கூட வைத்துள்ளனர் என்று குறிப்பிட்டார்.

காசா மருத்துவமனை தாக்குதல்: ஜோ பைடன் விளக்கம்

மருத்துவமனை தாக்குதல் குறித்து அமெரிக்க பாதுகாப்பு குழு விசாரணை நடத்தி வருவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். காசா மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியது இஸ்ரேல் ராணுவம் இல்லை. தாக்குதலில் பிற அமைப்புக்கு தொடர்பு இருக்கலாம். மற்ற குழுவினர் செய்தது போன்று தெரிகிறது; விசாரணை நடைபெற்று வருகிறது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் ஜோ பைடன் தெரிவித்தார்.

The post இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா முழுமையாக துணை நிற்கிறது; என்னென்ன உதவிகள் தேவையோ அனைத்தும் செய்து தரப்படும்: அதிபர் ஜோ பைடன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : America ,Israel ,President Joe Biden ,Tel Aviv ,President ,Joe Biden ,United States ,Hamas… ,Dinakaran ,
× RELATED இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு...